NATIONAL

தொடக்கக் கட்ட வாக்களிப்பை  பார்வையிட்டார் ஒற்றுமை அரசின் வேட்பாளர்- ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுகோள்

உலு சிலாங்கூர், மே 7- கோல  குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான தொடக்கக் கட்ட  வாக்குப்பதிவை ஒற்றுமை  அரசின் வேட்பாளர் இன்று அரச  மலேசிய போலீஸ் அகாடமியின்  பல்நோக்கு மண்டபத்தில் பார்வையிட்டார்.

காலை 8.45 மணிக்கு  வாக்குச் சாவடிக்கு வந்த  முப்பத்தோரு  வயதான பாங் சோக் தவோ, அங்கு சுமார் 30 நிமிடங்களைச் செலவிட்டு  வாக்களிப்பு நடைமுறைகளை  ஆய்வு செய்தார். இந்த வாக்களிப்பு மையம் இன்று காலை 8.00 மணிக்குத் திறக்கபட்டது.

பிற்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாங்,  தொடக்க கட்ட  வாக்களிப்புக்கு தகுதி பெற்ற அனைத்து வாக்காளர்களும் மாலை 5.00 மணிக்குள் தக்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொருவரும் வாக்களிக்கச் செல்லவும் மலேசியர்கள் என்ற முறையில்  தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவும் நான் அழைப்பு விடுக்கிறேன். வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய  வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இதன் வழி  மாநிலத்திற்கு நிலைத்தன்மை கிடைக்கும் என்றார் அவர்.

தொடக்கக் கட்ட வாக்களிப்பை பொறுத்த வரையில்,  வாக்குப்பதிவு முறையாக  ஒழுங்கமைக்கப்பட்டு சுமூகமாக நடப்பதை நான் கண்டேன். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டார்.

கோலா குபு பாரு இடைத்தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில்  ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல்,  பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் இடையே நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாகக் கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாகக் கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் தேர்தல் இதுவாகும்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.


Pengarang :