NATIONAL

இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேரரசரின் படத்தைப் பயன்படுத்திய ராமசாமிக்கு சிறை, அபராதம்

உலு சிலாங்கூர், மே 7- கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்
போது மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் படத்தைப்
பயன்படுத்திய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்குக் கோல குபு பாரு
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மாதச் சிறைத் தண்டனையும் 3,000
வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றத்தை பி. ராமசாமி (வயது 66) என்ற அந்த ஆடவர்
ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சித்தி ஃபாத்திமா தாலிப்
இந்த தண்டனையை வழங்கினார்.

கைது செய்யப்பட்ட தினமான மே 4ஆம் தேதியிலிருந்து ராமசாமி
தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையைச்
செலுத்தத் தவறினால் அவர் மேலும் 10 மாதச் சிறைத்தண்டனை
அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

கடந்த சனிக்கிழமை மாலை 5.40 மணியளவில் தாமான் புக்கிட் பூங்கா
பகுதியில் தனது நான்கு சக்கர இயக்க வாகனத்தில் இந்த குற்றத்தைப்
புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குரோத நோக்கத்துடன் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக 1954ஆம் ஆண்டு
தேர்தல் குற்றச் சட்டத்தின் 4(ஏ)1வது பிரிவின் கீழ் ராமசாமிக்கு எதிராக
குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்
ஐநதாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 10,000 வெள்ளி
வரை அபராதம் விதிக்க இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது.

அரசுத் தரப்பின் சார்பில் துணை ப ப்ளிக் புரோசிகியூட்டர் அஸ்மா சே
வான் வழக்கை நடத்திய வேளையில் ராமசாமியை பிரதிநிதித்து யாரும்
ஆஜராகவில்லை.

வழக்கு விசாரணையின் போது, இச்செயல் தவறானது எனத் தாம்
அறிந்திருக்கவில்லை என்றும் இச்செய்கைக்காகத் தாம் மன்னிப்பு கோருவதோடு குறைந்த பட்ச தண்டனை வழங்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வதாவும் ராமசாமி கூறினார்.


Pengarang :