ANTARABANGSA

ராஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலை தடுத்து நிறுத்துவீர்- அமெரிக்காவுக்குப் பாலஸ்தீனம் கோரிக்கை

ரமல்லா (பாலஸ்தீனம்), மே 7- காஸா தீபகற்பத்தின் தென் பகுதி நகரான ராஃபா தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக பாலஸ்தீன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் காஸாவிலுள்ள அல்-மாவாஸி நகருக்கு உடனடியாக இடம் பெயரும்படி ராஃபாவின் கிழக்கு பகுதியிலுள்ள பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய இராணுவம்  நேற்று உத்தரவிட்டது.

அப்பகுதியில் வசிக்கும் சுமார் 100,000 பாலஸ்தீன மக்கள் இடம் பெயர வேண்டும் என இஸ்ரேலிய இராணுவ வானொலியை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இனப் படுகொலைகளைத் தவிர்க்க இவ்விவகாரத்தில் அமெரிக்க உடனடியாகத் தலையிட வேண்டும் என்று பாலஸ்தீன நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

ராஃபா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக வட்டார மற்றும் அனைத்துலக நாடுகளை குறிப்பாக அமெரிக்காவைத் தொடர்பு கொள்ள நாங்கள் முயன்று வருகிறோம் என்ற ரமல்லாவிலிருந்து செயல்பட்டு வரும் பாலஸ்தீன நிர்வாகம் அறிக்கை ஒன்றில் கூறியது

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களினால் இடம்பெயர்ந்த சுமார் 15 லட்சம் பேர் ராஃபாவில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களில் இதுவரை 34,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சிறார்கள் மற்றும் பெண்களாவர்.


Pengarang :