NATIONAL

மலேசிய- தாய். எல்லையின் சுங்கை கோலோக் பகுதியில் கவச வாகனம், ட்ரோன் மூலம் கண்காணிப்பு

பாசீர் மாஸ், மே 7- மலேசிய தாய்லாந்து எல்லையில் சிறப்பான பாதுகாப்பை உறுதி செய்ய சுங்கை கோலோக் ஆற்றின் நெடுகிலும் கவச வாகனங்கள் மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை தென் தாய்லாந்தில் நிகழ்ந்த வெடி குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து 9வது கவச வாகனப் படைப் பிரிவின் கவச வாகனங்கள் அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ளதாகப் பொது தற்காப்புப் படையின் தென்கிழக்குப் பிரிவு துணை கமாண்டர் ஏசிபி ஹாக்கிமேல் ஹவாரி கூறினார்.

கமாண்டோ வி150 பிஜிஏ ரக கவச வாகனங்களின் வருகை அந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் பாதுகாப்பு மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் உலார் எல்லைச் சாவடி முதல் இப்ராஹிம் பென்ஷன் எல்லைச் சாவடி வரையிலான பகுதியில் அந்த கவச வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர நாட்டின் எல்லையில் நிகழகக்கூடிய நடவடிக்கைகளைக் கண்காணிக்க 7வது பட்டாளத்தின் ட்ரோன் பிரிவும் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அங்கு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நாட்டின் பாதுகாப்புக்கு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்சனையை விவேகத்துடன் கையாளாவிட்டால் வட்டார மக்களின் சமூவியல் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.


Pengarang :