NATIONAL

கே.கே.பி. இடைத்தேர்தல்-தொடக்கக்கட்ட வாக்களிப்பில் 97 விழுக்காட்டினர் பங்கேற்பு

உலு சிலாங்கூர், மே 8 – கோல குபு பாரு இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று நடைபெற்ற தொடக்கக் கட்ட  வாக்களிப்பில்  97 விழுக்காட்டினர் அதாவது 769 போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்கள்  முன்கூட்டியே வாக்களித்தனர்.

தங்கள் பணிகளைச் செவ்வனே  செய்ததற்காக தேர்தல் அதிகாரி மற்றும் அவரது குழுவினருக்கு    தேர்தல் ஆணையம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் கூறினார்.

தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாகோ மறைமுகமாகவோ  ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு வழங்கிய அரச  மலேசிய போலீஸ் படை, மலேசிய ஆயுதப்படைகள், உள்ளூர் அதிகாரிகள், தகவல் துறை, ஊடகவியலாளர்கள் மற்றும் பிற தரப்பினருக்கும் எங்கள் பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோல குபு பாரு இடைத்தேர்தல்  எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில்  ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் இடையே நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாகக் கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் தேர்தல் இதுவாகும்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.


Pengarang :