NATIONAL

தேசிய அளவிலான தமிழ்ப் பள்ளிகளுக்கிடையே ஒற்றுமை காற்பந்து போட்டி – ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது

பாங்கி, மே 8: நேற்று காலை 8 மணிக்குக் கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் இணைந்து தேசிய அளவிலான தமிழ்ப் பள்ளிகளுக்கிடையே ஒற்றுமை காற்பந்து போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தனர் என்று கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயகாந்தன் ஜெயசீலன் கூறினார். இப்போட்டி பண்டார் பாரு பாங்கி எம்பிகேஜே விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் கால்பந்து விளையாட்டுத் துறையில் இளம் மாணவர்கள் தங்களது ஆற்றலை வெளிக்கொணரவும் இதுபோன்ற போட்டி விளையாட்டுகள் மிகவும் அவசியம் என அவர் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

பாங்கி நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் குறிப்பாக தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே ஆக்கப்பூர்வமான விளையாட்டுத் திறனை அடையாளம் கண்டு இது போன்ற போட்டிகளை வழி நடத்துமாறு பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷா ரெட்ஷான் ஜோஹான் தனது உரையில் கூறினார். அவர் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவனத் தொடர்புத் தலைவர் அஹ்மட் அஸ்ரியும் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதுபோன்ற போட்டி விளையாட்டுகளை சுமூகமாக நடத்திய கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களை வெகுவாக பாராட்டினார்.

மேலும், இப்போட்டி நிகழ்வில் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன், கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. கெங்கம்மா முனியாண்டி, காஜாங் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சாந்தி ராஜு, ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி க. சுந்தரி ஆகியோருடன் பள்ளித் தரப்பினர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இப்போட்டியில் ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. இரண்டாம் நிலையில் காஜாங் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வெற்றிகோப்பை, பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது என போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஜெயகாந்தன் ஜெயசீலன் தெரிவித்தார்.


Pengarang :