NATIONAL

கோல குபு பாரு தொகுதிக்கு நிதி ஒதுக்கீடு- அமைச்சரின் அறிவிப்பு தொடர்பில் எம்.ஏ.சி.சி. விசாரணை

புத்ராஜெயா, மே 8- கோல குபு பாரு தொகுதியில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற வீடமைப்பு மற்றும்
ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங்கின் அறிவிப்பு தொடர்பில்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரணை நடத்தும்.

அந்த அறிவிப்பு லஞ்ச ஊழலுடன் தொடர்புடையதா என்பதைக்
கண்டறிவதற்காக ஆணையம் விசாரணையை நடத்தும் என்று அதன்
தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

இந்த விவகாரத்தை எம்.ஏ.சி.சி.யின் புகார் மையம் கவனித்து வருகிறது.
இது வரை விசாரணை அறிக்கை எதுவும் திறக்கப்படவில்லை என்று
அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில்
நடைபெற்ற 2024-2028 தேசிய ஊழல் ஒழிப்பு வியூகத் திட்ட தொடக்க
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் குறிப்பட்டார்.

ஊராட்சி மன்றங்களின் கண்காணிப்பின் கீழ் சீன புதுக்கிராமங்களின்
மேம்பாட்டை உட்படுத்திய 48.2 லட்சம் வெள்ளி மதிப்பிலான 14 திட்டங்கள்
உள்பட உலு சிலாங்கூரில் 52.1 லட்சம் வெள்ளியை சம்பந்தப்படுத்திய
அடிப்படை வசதித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை ங்கா கடந்த ஏப்ரல்
மாதம் 18ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்
ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கோல குபு பாருவுக்கு
மேற்கொண்ட பயணத்தின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனிடையே, சொத்துகளை அறிவிக்கத் தவறியது தொடர்பில் முன்னாள்
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை உடனடியாகக் கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அஸாம் சொன்னார்.

சொத்துகளை அறிவிக்கத் தவறியதற்காக விசாரிக்கப்பட்டு வரும்
உயர்மட்டப் பிரமுகர்களில் டாக்டர் மகாதீரும் அடங்குவார் என அஸாம்
முன்னதாகக் கூறியிருந்தார்.


Pengarang :