NATIONAL

ராஃபா மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு மலேசியா கண்டனம்

கோலாலம்பூர், மே 8- காஸாவில் உள்ள ரஃபா மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எகிப்து மற்றும் கத்தார் ஏற்பாட்டிலான  அமைதிப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட  போர்நிறுத்த முன்மொழிவை ஹமாஸ்  ஏற்றுக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு  இந்த தாக்குதல் நடத்தப்பட்டதானது  அமைதி  முயற்சிகளுக்கு  ஒத்துழைக்க இஸ்ரேல்  விருப்பாததை தெளிவாகக் காட்டுகிறது என்று வெளியுறவு அமைச்சு  (விஸ்மா புத்ரா) கூறியது,

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான  இனப்படுகொலையை தொடர இஸ்ரேலிய ஆட்சி உறுதியாக உள்ளது. எனவே, சர்வதேச சமூகத்திடம் இருந்து இஸ்ரேல் கடுமையான கண்டனங்களைப் பெற வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் குறிப்பாகக் காஸாவின் ரஃபாவில் பொதுமக்கள் மீது  மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் மிகவும் கொடூரமானவை.  குழந்தைகள், பெண்கள் அடைக்கலம் புகுந்துள்ள நெரிசல் மிகுந்த முகாம்கள் மட்டுமே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினரிடமிருந்து காத்துக் கொள்ளும் கடைசி கோட்டைகளாக விளங்குகின்றன என்று அது குறிப்பிட்டது.

இஸ்ரேலிய அரசாங்கம்   வேண்டுமென்றே குற்றச் செயல்களைப் புரிவதை  நிறுத்துவதுவதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் இரட்டிப்பாக்க வேண்டும்  என்பதோடு அனைத்துலக மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி அந்நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மலேசியா வலியுறுத்தியது.


Pengarang :