NATIONAL

கால்பந்து விளையாட்டில் வன்முறைக்கு இடமில்லை- மந்திரி புசார்

ஷா ஆலம், மே 8- அண்மையில் நடந்த எரிதிராவக தாக்குதலால்
காயமடைந்த சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் முக்கிய ஆட்டக்காரரான
ஃபைசால் ஹலிமிற்கு ஆதரவளிக்கும் செய்திகள் தொடர்ந்து
வந்தவண்ணம் உள்ளன. அந்த தேசிய விளையாட்டாளருக்கு சமூகத்தின்
அனைத்து நிலையிலான மக்களும் ஒருமித்த ஆதரவைப்
புலப்படுத்தியுள்ளனர்.

ஃபைசாலுக்கு எதிராக நடத்தப்பட்ட கோரத் தாக்குதலை கண்டிப்பதில்
சிலாங்கூர் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதோடு அவரின் பூரண நலம்
பெறுவதற்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்று அந்த சமூக
ஊடகத்தில் வெளியிட்ட சில பதிவுகளில் அவர் கூறியுள்ளார்.

இந்த எரிதிராவக தாக்குதல் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு கடுமையாக
பாடுபட்ட உற்சாகமும் நாட்டுப் பற்றும் கொண்ட ஒரு நபரின்
வாழ்க்கையை சீர்குலைத்துள்ளதோடு அந்த நாட்டின் முதல் நிலை
விளையாட்டிற்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்
சொன்னார்.

கடந்த 5ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பேரங்காடி ஒன்றில் 26
வயது பைசாலுக்கு எதிராக எரிதிராவக தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதல் காரணமாக அவர் நான்காம் டிகிரி பாதிப்பை
எதிர்நோக்கியுள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஃபைசாலுக்கு
மேலும் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இதனிடையே, இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்த சிலாங்கூர்
எஃப்.சி. குழு பெரிய கனவுகளுடன் பினாங்கு கடலோரப் பகுதியிலிருந்து
வந்த அந்த இளைஞருக்கு நாம் ஒருமித்த ஆதரவைப் புலப்படுத்த
வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.


Pengarang :