ECONOMYMEDIA STATEMENT

நீர் சுத்திகரிப்பு மையத்தில்  பராமரிப்புப் பணி -ஜூன் 6 அதிகாலை 3.00 மணிக்கு நீர் விநியோகம் தொடங்கும்

ஷா ஆலம், மே 22 – சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதலாம் கட்டப் பகுதியில் பராமரிப்பு  மற்றும் கருவிகளை மாற்றும் பணி வரும் ஜூன் 5 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மேற்கொள்ளப்படும்.

இந் நடவடிக்கையின் காரணமாக  பெட்டாலிங், கிள்ளான்,  ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும்.

பாதிக்கப் படும் பகுதிகளிலுள்ள பயனீட்டாளர்கள்  போதுமான அளவு நீரை சேமித்து வைக்கவும் இடையூறு ஏற்படும் காலம் முழுவதும் நீரை கவனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப் படுகிறார்கள் என்று பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகள்  முடிந்து  விநியோக முறை நிலைப்படுத்தப்பட்ட பிறகு பயனீட்டாளர்கள் ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 3.00 மணி தொடங்கி  நீர் விநியோகத்தை கட்டங் கட்டமாகப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட  பகுதிகளுக்கு டேங்கர்கள்  லோரிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் என்று அந்நிறுவனம் தனது முகநூல் பதிவில் கூறியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பயனீட்டாளர்கள்   ஆயர் சிலாங்கூரின் அனைத்து வாடிக்கையாளர் சேவை முகப்பிடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரை பெறலாம் என்றும் அது மேலும் தெரிவித்தது.

நீர் விநியோகத் தடை தொடர்பான மேல் விபரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் முகநூல், இண்ட்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும், 15300 என்ற தொலைபேசி எண் அல்லது  https://www.airselangor.com/  என்ற அகப்பக்கம் வழியாகவும் விவரங்களைப் பெறலாம்.


Pengarang :