ECONOMYMEDIA STATEMENT

பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை – அன்வார் எச்சரிக்கை

கோலாலம்பூர், மே 22 – நாட்டில் அண்மைய காலமாக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

மலேசியாவின் அமைதியையும் அதன் செழிப்பான பொருளாதாரத்தையும் சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

சமீபத்திய வாரங்களில் பாதுகாப்புப் பணியாளர்களின் உயிரைப் பறித்த பல வன்முறைச் சம்பவங்கள், தீவிரவாதக் கும்பல்கள் மற்றும் குழப்பத்தை தூண்டி விடுவோரின் நடவடிக்கைகளால் நமது தேசம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்த கும்பல்களுக்கு எதிராக நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்பதை பாதுகாப்புப் படையினருடனான  சந்திப்புக்குப் பிறகு நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இறைவன் அருளால் நிலைமை  கட்டுப்படுத்தப்பட்டு அமைதியான சூழல் நிலவும் என்றும் அவர் நேற்றிரவு நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய நேரடி உரையில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மே 17ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள உலு திராம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த இரண்டு போலீசார் முகமூடி அணிந்த நபரின் தாக்குதலில் பலியான தோடு மற்றொரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

அதே நாளில் தலை நகரில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் இஸ்தானா நெகாராவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு உள்ளூர் ஆடவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களின் வாகனத்தில் ஒரு கத்தி கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்ததாக, இம்மாதம் 18ஆம் தேதி  சீ பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கின் வீட்டிற்கு இரண்டு தோட்டாக்கள் அடங்கிய மிரட்டல் கடிதம்  அனுப்பப்பட்டது.

மேலும் மே 19ஆம் தேதி  பினாங்கில் உள்ள டத்தோ கிராமாட் காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்றதாக சந்தேகிக்கப்படும் 35 வயதான உள்ளூர் நபர்  கைது செய்யப்பட்டார்.


Pengarang :