ECONOMYMEDIA STATEMENT

தொழுகையில் இருந்த தாயாரை பால் மரம் சீவும் கத்தியால் தாக்கிய மகன் கைது

கிரிக், மே 22- வீட்டில் தொழுகையில் இருந்த தன் தாயாரை ரப்பர் மரம் சீவும்  கத்தியால் தாக்கி  காயப்படுத்திய  29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இங்குள்ள கம்போங் பொங்கூரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் தனது தாயை காப்பாற்ற முயன்ற 15 வயதுடைய இளைய சகோதரனையும் சந்தேக நபர் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் தனது 54 வயது தாயை முகத்திலும் உடலின் இடது பக்கத்திலும் பலமுறை தாக்கியதாக  நம்பப்படுகிறது என்று பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.

தொழுகை  செய்து கொண்டிருந்த போது தன் மகனால் திடீரென தாக்கப்பட்டதால் அந்த மாது உதவி கோரி கூச்சலிட்டு உள்ளார்.

குளியலறையில் இருந்த சந்தேக நபரின் இளைய சகோதரர் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது ​​சகோதரர் தன் தாயை தொடர்ந்து தாக்குவதைக்  கண்டுள்ளார். தாய்க்கு உதவ முயன்றபோது அவரும் அண்ணனால் தாக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

காயங்கள் காரணமாக ரத்தம் வழிந்த நிலையில் பெர்சியா காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வந்த இருவரும் நேற்று காலை 7.50 மணியளவில் கிரிக் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக முகமது யூஸ்ரி கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழியை குற்றவியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் விசாரணைக்காக  தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி இன்று பெறப்பட்டது என்றார் அவர்.


Pengarang :