ECONOMYMEDIA STATEMENT

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அவசரமாகத் தரையிறங்கிய சம்பவத்தில் ஒன்பது மலேசியர்கள் காயம்

கோலாலம்பூர், மே 22 – காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (சியா) எஸ்கியூ321 விமானத்தில் ஒரு பணியாளர் உட்பட ஒன்பது மலேசியர்கள் காயமடைந்ததை தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 21)   லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் விமானம்  அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த  விமானத்தில் இருந்த ஒன்பது மலேசியர்களும் தற்போது காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தது.

அந்த விமானத்தில் 16 மலேசியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளுடன் தூதரகம்  தொடர்பில் இருந்து வருகிறது, துணைத் தூதரக அதிகாரிகள் பேங்காக்கில் உள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவி வழங்குகிறார்கள்.

தற்போது, ​​ஆறு மலேசியர்கள் சமிதிவேஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனையிலும் மேலும் மூவர் சமிதிவேஜ் சுகும்விட் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் உடலில் வெளி மற்றும் உள் காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும்  ஒரு நபரின் உடல் நிலை ஆபத்தாக அதேசமயம் சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறின

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் விரும்புவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அந்த விமானம் 37,000 அடி உயரத்தில் இருந்தபோது  திடீரென  காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது. ​​

அந்த  போயிங் 777-300ER ரக  விமானத்தின் விமானி  உடனடியாக மருத்துவ அவசர நிலையை அறிவித்தது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு  பேங்காக்கில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார்.

இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 73 வயதான பிரிட்டிஷ் நபர் என்று சுவர்ணபூமி விமான நிலைய இயக்குனர் கிட்டிபோங் கிட்டிகாச்சோர்ன் முன்னதாகக் கூறியிருந்தார்.


Pengarang :