ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 புதிய அலையை கையாள சிலாங்கூர் தீவிர ஆய்வு- ஜமாலியா தகவல்

ஷா ஆலம், மே 23- சிலாங்கூர்  மாநிலத்தில் கோவிட் -19  புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் அறிக்கை கிடைக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக சிங்கப்பூரில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையுடன் தமது தரப்பு இணைந்து  இவ்விவகாரத்தை அணுக்கமாக கண்காணித்து வருவதாக ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

மாநிலத்தில் உள்ள எந்த மருத்துவமனையிலும் புதிய திரிபு  கண்டுபிடித்ததாக மாநில சுகாதாரத் துறை  இதுவரை அறிவிக்கவில்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாங்கள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

எப்போதும் தங்களின் சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும்படி குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம். நெரிசலான இடங்களில் முகக்கவரியை அணியுங்கள்.  இவ்வாறு செய்வதன் மூலம் கோவிட்-19 நோயை தடுப்பது மட்டுமல்லாமல் இருமல் போன்றவை பிறருக்கு பரவாமல் தடுக்க  முடியும் என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சிங்கப்பூரில் தொற்றுநோய் இரட்டிப்பாகியதைத் தொடர்ந்து கோவிட் -19 நோய்த் தொற்றின் புதிய அலையை தாங்கள் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கடந்த ஞாயிற்றுக்கிழமை    கூறியிருந்தார்.

தற்போதைய நிச்சயமற்ற பருவநிலை உள்ளிட்ட சுற்றுப்புற சூழ்நிலைகள் கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்கும் அதே வேளையில் தங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளும் படியும் பொது மக்களை ஜமாலியா அறிவுறுத்தினார்.

டிங்கி  பரவலைத் தடுக்க ஏடிஸ் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். தற்போது வெப்பமான கால நிலையும் அப்படித்தான். நிறைய தண்ணீர் குடிப்பது  வெயிலில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :