ECONOMYMEDIA STATEMENT

வேலைவாய்ப்பு மோசடிக் கும்பல் முறியடிப்பு- 13 அந்நிய நாட்டினர் கைது

கோலாலம்பூர், மே 23-  இணையம் வழி வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 வெளிநாட்டு ஆடவர்களையும் இரண்டு பெண்களையும் போலீசார் நேற்று முன்தினம்  கைது செய்தனர். தலைநகர் புக்கிட் பிந்தாங், ஜாலான் சிலோனில்  உள்ள இரண்டு குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 23 முதல் 38 வயதுடைய அந்த நபர்களிடமிருந்து  ஏழு மடிக்கணினிகள், 21 கைப்பேசிகள் மற்றும் ஒரு மோடம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இந்த கும்பல், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாக செயல்பட்டு வந்துள்ளனர்.  அவர்களிடம்  மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் கடந்தகால குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 420/511 பிரிவின் கீழ் மேல் விசாரணைக்காக அவர்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :