SELANGOR

சிலாங்கூர் எஃப்.சி. விளையாட்டாளரின் வீட்டில் கொள்ளை

ஷா ஆலம், மே 23- சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் அகமது குஸாய்மி பையின் வீட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள், நான்கு விலை மதிப்புள்ள தோள் பைகள், அனைத்துலக கடப்பிதழ் உள்ளிட்ட பொருட்களை களவாடிச் சென்றனர்.

சிலாங்கூர் ஓரிட விளையாட்டு மையத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டு இரவு மணி 9.00 அளவில் வீடு திரும்பிய போது வீட்டில் கொள்ளை நிகழ்ந்துள்ளதை அந்த விளையாட்டாளர் அறிந்தார்.

இரவு 9.00 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் முன்புற மற்றும் பின்புற கதவுகள் திறந்திருப்பதை கண்டேன். உடனடியாக வீட்டினுள் சோதனையிட்ட போது யமஹா, ஒய் 15 ரக மோட்டார் சைக்கிள், நான்கு தோள் பைகள் மற்றும் கடப்பிதழ் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதை அறிந்தேன் என்று அவர் சொன்னார்.

இந்த சம்பவத்தில் தனக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு சரிவரத் தெரியவில்லை என்று காவல் துறையில் அளித்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 11.30 மணியளவில் குஸாய்மி ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் விரைவில் தாம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவிருப்பதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே 2ஆம் தேதி கோல திரங்கானுவில் உள்ள திரங்கானு எஃப்.சி. கால்பந்து விளையாட்டாளர் அக்யார் ரஷிட் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அந்த விளையாட்டாளர் கால் மற்றும் தலையில் தாக்கி காயப்படுத்தியதோடு வீட்டிலுள்ள பொருள்களையும் கொள்ளையிட்டு தப்பினர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு சிலாங்கூர் எஃப்.சி. விளையாட்டாளர் பைசால் ஹலிம் மீது எரி திராவக வீச்சு நடத்தப்பட்டது. பெட்டாலிங் ஜெயா வில் உள்ள பேரங்காடி ஒன்றில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பைசால் நான்காம் கட்ட தீக்காயங்களுக்கு உள்ளானார்.


Pengarang :