SELANGOR

உணவுப் பாதுகாப்பு செயல்முறைகளை வலுப்படுத்த எவெரெக்ஸ் நிறுவனத்துடன் எம்.பி.எஸ்.ஏ. ஒத்துழைப்பு

ஷா ஆலம், மே 23 –  உணவு வளாகத் தூய்மை பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில்
ரசாயனங்கள் மற்றும் தூய்மை  துறைகளில் நிபுணத்துவம் பெற்ற  எவெரெக்ஸ்
டெக்னாலஜி சென்.பெர்ஹாட் நிறுவனத்துடன்  ஷா ஆலம் மாநகர் மன்றம் புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் (எம் ஓ யு) கையெழுத்திட்டுள்ளது.

2025 சிலாங்கூருக்கு  வருகை தாருங்கள்  ஆண்டு இயக்கத்திற்கு தயார் படுத்திக்   கொள்ளும்  மாநிலத்தின்  முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்  மாநகர் மன்றத்தின் நடவடிக்கையின் ஒரு  பகுதியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது என்று மாநகர் மன்றத்தின் வர்த்தகத்  தொடர்புப் பிரிவு இயக்குநர் முகமது அசார் முகமது  ஷெரிப் கூறினார்.
உணவு வளாகத்தின் தூய்மை பிரச்சாரத்தில் 300 உணவு வணிக நடத்துனர்கள் மற்றும்
உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வரும் வளாகங்களில்
தூய்மை நிலைகளை மேம்படுத்துதல், குறைந்த  தூய்மை கொண்ட வளாகங்களில்  தரத்தை   மேம்படுத்துதல் மற்றும் அனைத்து உணவு வளாகங்களிலும் மிக உயர்ந்த தூய்மைத் தரத்தை  உறுதி செய்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2025/2026  சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டை முன்னிட்டு   ஷா ஆலமில் உள்ள
ஒவ்வொரு உணவு வளாகத்தின் தூய்மையையும் நிர்ணயிக்கப்பட  தரநிலைகளை பூர்த்தி
செய்துள்ளதை உறுதி செய்ய விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தூய்மை தொடர்பான நடைமுறைகளை
குறித்து பற்றி உணவு வளாகங்களை நடத்துபவர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பது
இதன் நோக்கமாகும் என்று அசார் கூறினார்.
கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்திடும் சடங்கில் ஷா ஆலம் டத்தோ பண்டார் செரேமி தர்மான், எவெரக்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கெவின் தான்  மற்றும் மாநகர்மன்ற உறுப்பினர்களும் நிர்வாகப் பிரிவினரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஷா ஆலமில் 4,117 உணவு வளாகங்களுக்கு ஷா
ஆலம் மாநகர் மன்றம் உரிமம் வழங்கியுள்ளது.

Pengarang :