SELANGOR

பெட்டாலிங் ஜெயா வில் டிங்கி அபாயம் மிகுந்த ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டன

பெட்டாலிங் ஜெயா, மே 23 – பெட்டாலிங் ஜெயா டிங்கி பரவல் அபாயம் அதிகம் உள்ள ஏழு புதிய இடங்களை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அடையாளம் கண்டுள்ளது. அந்த வைரல் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு  மேம்படுத்தப்பட்ட முயற்சிகள் தேவை என்பதை இது குறிக்கிறது.

பிஜேயு 10 இல் உள்ள இடாமான் அபார்ட்மெண்ட், பிஜேயு 6ஏ இல் உள்ள கம்போங் சுங்கை காயு ஆரா 2, எஸ் எஸ் 4B, எஸ் எஸ் 21,  கிளானா டி புத்ரா, புத்ரி காண்டோமினியம்,  மற்றும் மேடான் சஹாயா 1 அப்பார்ட்மெண்ட் பிஜேஎஸ்  2சி ஆகியவையே டிங்கி பரவல் அபாயம் உள்ள அந்த ஏழு இடங்களாகும்.

இப் பிரச்சினைக்குத் தீர்வு காண வரும் ஜூலை மாதத்திற்குள்  முயற்சிகளை முடுக்கிவிட தற்போதுள்ள பணிக்குழு  அறிவுறுத்தப் பட்டுள்ளது  பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது ஜாஹ்ரி சாமிங்கோ கூறினார்.

அடுத்த 100 நாட்களில் பெட்டாலிங் ஜெயாவில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது எனது இலக்காகும்.  நாங்கள் இவ்வாறு செய்தால் இது நாட்டின் ஒட்டுமொத்த சம்பவங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

டிங்கி தொடர்பாக நாங்கள்  சிறப்புக் குழுவை அமைத்துள்ளோம். எனினும், ஜூன் மாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெறும் காரணத்தால் ஜூலை மாதத்தில் மட்டுமே நாங்கள் அதில் முழுமையாக கவனம் செலுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

டத்தோ பண்டாராக பதவியேற்று 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த தகவல்களை வட்டார மக்களுடன் பகிர்ந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

டிங்கியை கட்டுப்படுத்துவதற்காக  மாவட்ட சுகாதார அலுவலகம், உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சங்கங்களுடன் இணைந்து நோய்ப் பரவலின் ஆபத்து குறித்து உள்ளூர் மக்களுக்கு  விளக்கத்தை வழங்கும் நடவடிக்கையில் மாநகர் மன்றம் ஈடுபட்டு வருகிறது என்று ஜாஹ்ரி சொன்னார்.


Pengarang :