ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கடுமையான தகுதி நடைமுறைக்கு பின்னரே சிலாங்கூர் டி.ஆர்.டி. நடத்துநராக ஆசியா மோபிலிட்டி தேர்வு

ஷா ஆலம், மே 25- சிலாங்கூரில் அமல்படுத்தப்பட்ட தேவை அடிப்படையிலான இடை மாற்றப் பயணச் சேவை (டி.ஆர்.டி.) நடத்துநராக ஆசியா மோபிலிட்டி டெக்னோலோஜிஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் நியமனம் அபாட் எனப்படும் தரை பொது போக்குவரத்து நிறுவனத்தின் அனுமதி உள்பட கடுமையான தகுதி நடைமுறைகளுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட்டது.

டிரக் ரைடர்ஸ் மற்றும் பாடான் பாஸ் கோச் சென். பெர்ஹாட் நிறுவனங்களை நடத்தி வரும் அந்த நிறுவனம் பி.ஒ.சி. எனப்படும் கருத்தாக்க ஆதாரத் திட்டங்களை அமல்படுத்துவதில் பெற்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ஆசியா மோபிலிட்டி மற்றும் பாடான் பாஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 2022 டிசம்பர் 22 ஆம் தேதி மற்றும் 2023 பிப்ரவரி 24ஆம் தேதிகளில் தரை பொது போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து பி.ஒ.சி. அனுமதியைப் பெற்றதாக அவர் சொன்னார்.

இந்த டி.ஆர்.டி. முன்னோடித் திட்டம் தொடர்பில் தங்கள் பரிந்துரைகளை திட்ட அமலாக்க குழுவிடம் முன்வைக்கும்படி அவ்விரு நிறுவனங்களும் முன்னதாக கேட்டுக் கொள்ளப் பட்டன என அவர் குறிப்பிட்டார்.

தரை பொது போக்குவரத்து நிறுவனத்தின் அப்போதைய முடிவின்படி அவ்விரு நிறுவனங்களும் இந்த டி.ஆர்.டி. சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

டி.ஆர்.டி. சேவையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி தர நிர்ணயம் நிலைநிறுத்தப் படுவதை உறுதி செய்வதில் தமது நிர்வாகம் கொண்டுள்ள கடப்பாட்டை இந்த முடிவு பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 டி.ஆர்.டி. சேவையை மேற்கொள்வதற்கு ஆசியா மோபிலிட்டி நிறுவனத்தை அரசாங்கம் நியமனம் செய்தது குறித்து சமூக ஊடக பயனீட்டாளர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் கேள்வியெழுப்பியிருந்தது குறித்து இங் இந்த விளக்கத்தை வழங்கினார்.


Pengarang :