MEDIA STATEMENT

எரிதிராவகத் தாக்குதலுக்கு இலக்கான ஃபைசால் இன்று வீடு திரும்ப அனுமதி

ஷா ஆலம், மே 25- எரிதிராவகத் தாக்குதலால்  நான்காம் கட்ட தீக்காயம் அடைந்த தேசிய கால்பந்து  வீரர் ஃபைசால் ஹலிம் 20 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

சிலாங்கூர் எஃப்.சி.  குழுவின் அந்த விளையாட்டாளரின் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம்  உண்மையில்  மிகவும் அசாதாரணமானது  என்பதோடு  அனைத்து தரப்பினரின் கணிப்புக்கும் அப்பாற்பட்டது என்று மருத்துவ நிபுணர்கள்  விவரித்துள்ளனர்  என்று சிலாங்கூர்  கால்பந்து சங்கம் கூறியது.

எரி திராவகத் தாக்குதலின்  விளைவாக ஏற்பட்ட  நான்காம் கட்ட காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக அவருக்கு  நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்  மருத்துவமனையிலிருந்து  வீடு திரும்ப இன்று அவர் அனுமதிக்கப்பட்டார்.

பணியில் இருக்கும்  மருத்துவர்களின்  கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் அடிப்படையில், கடுமையான காயங்களிலிருந்து பைசல் ஹலிம் குணமடைந்தது அசாதாரணமானது மற்றும் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று இன்று முகநூல் பக்கத்தில் வெளியிட்ட  ஒரு அறிக்கையில்  அது தெரிவித்தது.

ஃபைசாலுக்கு சிகிச்சையளித்த  அனைத்து மருத்துவ அதிகாரிகளுக்கும் அவர்  நலம் பெற  நலனுக்காக பிரார்த்தனை செய்த  கிளப் உறுப்பினர்கள் மற்றும் மலேசிய மக்களுக்கும் தாங்கள் நன்றி  தெரிவித்துக் கொள்வதாக  சிலாங்கூர் கால்பந்து சங்கம் தெரிவித்தது..

கடந்த மே 5ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் எரிதிராவகம்  வீசப்பட்டதில் மிக்கி என அழைக்கப்படும் ஃபைசால் காயமடைந்தார்.  இச்சம்பவம் உள்ளூர் கால்பந்து அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


Pengarang :