ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தாமான் வாவாசான் மண் சரிவு பகுதியில் சீரமைப்புப் பணி ஆண்டு இறுதியில் முற்றுப் பெறும்

சுபாங் ஜெயா, மே 30- இங்குள்ள தாமான் வாவாசன், ஜாலான் வாவாசானில் நிலச் சரிவு ஏற்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மலைச்சாரலை பலப்படுத்தும் பணி இவ்வாண்டு இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பகுதியில் தளம் மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்துவது, வடிகால்களை அமைப்பது உள்ளிட்ட பணிகள் தற்போது 20 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.

இருப்பினும், இந்த இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் முற்றுப் பெற சிறிது காலம் பிடிக்கும் என்பதால் அவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.

சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு மிக அருகில் உள்ளதால் அவர்களை வீடு திரும்ப அனுமதித்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்றார் அவர்.

இன்று இங்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் முழு அளவிலான கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ஏற்பட்ட மண் சரிவு காரணமாக அருகிலுள்ள ஒன்பது வீடுகளைச் சேர்ந்த 29 குடியிருப்பாளர்கள்  பாதுகாப்பு கருதி வீடுகளைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டனர்.

ஜாலான் வாவாசான் 3/9 மற்றும்  ஜாலான் 3/14 ஆகிய சாலைகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் நான்கு வாகனங்களும் மண்ணில் புதையுண்டன. எனினும், அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் உயிருடச்சேதம் ஏற்படவில்லை.

 


Pengarang :