ECONOMYMEDIA STATEMENT

மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்களிப்பை நீட்டிக்க சீனா இணக்கம்

பெய்ஜிங், மே 31 – மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா விலக்களிப்பை  15 முதல் 30 நாட்களுக்கு நீட்டிக்க சீனா ஒப்புக்கொண்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் ஏற்பட்டு  50வது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட  கொண்டாட்ட நிகழ்வின் போது அவர் இதனை அறிவித்தார்.

நேற்று பிரதமர் லீ கியாங்குடனான எனது சந்திப்பின் போது ​​எழுப்பப்பட்ட விஷயங்களில்  சீனாவுக்கு வரும்  மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்களிப்பை 15லிருந்து  30 நாட்களாக நீட்டிப்பதும் அடங்கும். மலேசிய அரசாங்கம்  சீன சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாட்களுக்கு விசா இல்லாத பயண வாய்ப்பை வழங்கியுள்ளது என்று அவர் சொன்னார்.

இதற்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டதை நான் தெரிவிக்க விரும்புகிறேன், ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்த விசா விலக்களிப்பு செயல்படுத்தப்படும் என்று ஜாஹிட் கூறினார்.

இங்குள்ள தியோயுதை அரச விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற  இவ்விழாவில் துணை அதிபர்  டிங் கஷியுசஜியாங்கும் கலந்து கொண்டார்.

துணைப் பிரதமர் ஜாஹிட் நேற்று சீனப் பிரதமர் லீ கியாங்கை மரியாதை நிமித்தம் சந்தித்த போது  இந்த விஷயம் முன்வைக்கப் பட்டதாகவும் இதற்கு  சீனாவிடமிருந்து நேர்மறையான பதில் கிடைத்ததாகவும்  சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நோர்மான் முகமது நேற்று  கூறியிருந்தார்.

வரும் 2025 ஆம் ஆண்டு இறுதி வரை மலேசியா மற்றும் 11 நாடுகளுக்கு  குறுகிய கால பயணங்களுக்கான விசா இல்லாத கொள்கையை சீனா நீட்டித்துள்ளது. இந்த நீட்டிப்பு சீன மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு இடையே பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசா விலக்கு அளிப்பதாக  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார்.


Pengarang :