ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஹமாஸ் முற்றிலுமாக துடைத்தொழிக்கப்படும் வரை நிரந்தரப் போர் நிறுத்தம்  கிடையாது- இஸ்ரேல் திட்டவட்டம்

ஜெருசலேம், ஜூன் 2- காஸாவில் ஹமாஸின் ராணுவம் மற்றும் நிர்வாகத் திறன் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை நிரந்தர போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காஸாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான மூன்று கட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதைத் தொடர்ந்து  நெதான்யாகுவின்  இந்த கருத்து இணையத்தில் வெளிவந்துள்ளது.

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகள் மாறவில்லை . ஹமாஸ் அமைப்பின் இராணுவம் மற்றும் நிர்வாகத்  திறன்களை அழித்தல், அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவையே அந்த நிபந்தனைகளாகும் என்று என்று அவர் கூறினார்.

நிரந்தர போர்நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன்னர் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தும். இந்த நிபந்தனைகள் நிறைவேறும் முன் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளும் என்ற கருத்து ஒரு தொடக்கம் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :