ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊடகச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் தருகிறோம்- 3ஆர் விவகாரங்களை மட்டும் தொடாதீர்கள்- அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 8- இந்நாட்டில் ஊடகச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கம் ஒரு போதும் விலகாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

எனினும், இந்த ஊடகச் சுதந்திரத்தை 3ஆர் எனப்படும் ஆட்சியாளர்கள், இனம் மற்றும் சமயத்தை தொடுவது உள்பட ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.

குறைகளைச் சுட்டிக் காட்டுவதிலும் விமர்சனம் செய்வதிலும் ஊடகங்களுக்கு உள்ள சுதந்திரத்தை தற்காப்பதில் அரசாங்கம் எப்போதும் உறுதியாக உள்ளது. இந்த உணர்வு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து அமலில் இருந்து வருகிறது.

தங்கள் கருத்துகளையும் கண்டங்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கும் ஊடகங்கள் அல்லது பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அல்லது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதில்லை என்பது எனது மற்றும் சக அமைச்சரவை உறுப்பினர்களின் நிலைப்பாடாகும் எனவும் அவர் சொன்னார்.

நாட்டின் பாதுகாப்பு, பேரினவாதம், இனவாதம் அல்லது சமயத் தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் கடுமையானப் போக்கை கடைபிடிப்பது சில தரப்பினருக்கு மனக்கிலேசத்தை ஏற்படுத்தினாலும் ஊடகச் சுதந்திரம் தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற எம்.பி.ஐ.-பெட்ரோனாஸ் மலேசிய ஊடகவியலாளர்கள் விருதளிப்பு மற்றும் 2024 மலேசிய பத்திரிகையாளர் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய மற்றும் நாட்டை மேம்படுத்தக்கூடிய செய்திகள் மீது உள்நாடு  பத்திரிகையாளர்கள் கவனம் செலுத்தினால் மலேசியா மகத்தான நாடாக உருவெடுக்க முடியும் என்றும் பிரதமர் சொன்னார்


Pengarang :