ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கால்பந்து விளையாட்டாளரின் வீட்டில் திருடியவர்கள் இதர வீடுகளுக்கும் குறி வைத்துள்ளனர்

உலு லங்காட், ஜூன் 8- சமீபத்தில் ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் எஃப்.சி. குழுவின்   தற்காப்பு ஆட்டக்காரர் அஹ்மத் குசைமி பையின் வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபர்கள் அந்த விளையாட்டாளரின் வீட்டை மட்டும் குறி வைக்கவில்லை என நம்பப்படுகிறது.

சந்தேக நபர் அஹ்மத் குசைமியின் வீட்டைக் கொள்ளையடிக்கத் தேர்ந்தெடுப்பதற்கு முன் அந்த கொள்ளையர்கள்  வேறு பல  வீடுகளையும் நோட்டம் விட்டுள்ளது தமது தரப்பு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் கூறினார்.

வீட்டின் உரிமையாளர் ஒரு கால்பந்து வீரர் என்பதற்காக  அவ்வீடு இலக்காகக் கொள்ளப்படவில்லை. மாறாக,   அது தற்செயலாக நிகழ்ந்துள்ளது.  வீட்டின் உரிமையாளர் (யார்) என்பது ஒரு  பிரச்சனை  அல்ல என்று அவர் விளக்கினார்.

வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால்  கால்பந்து விளையாட்டு வீரரின் வீடு   மற்ற வீடுகளைக் காட்டிலும் குறைவான ஆபத்து கொண்டது என்று கொள்ளையர்கள்  நினைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அந்த  வீட்டிற்குள் நுழைந்தனர் என்றார்  அவர்.

காஜாங்கில் உள்ள தாமான் ரக்கானில் இன்று நடைபெற்ற அரச மலேசிய போலீஸ் படையின் சிலாங்கூர் தலைமையகத்தின்  அமானித்தா எனப்படும் அமான் வனித்தா அமைப்பின் தாமான் தத்தெடுப்பு நிகழ்வைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த மே 22 ஆம் தேதி குசைமி சிலாங்கூர் பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரது  வீடு கொள்ளையடிக்கப் பட்டது.

இந்த கொள்ளைச் சம்பவத்தில்   ஒரு மோட்டார் சைக்கிள், பல்வேறு பிராண்டுகள் கொண்ட நான்கு  பைகள் மற்றும் அனைத்துலக கடப்பிதழை அவர்  இழந்தார்.


Pengarang :