ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நால்வருக்குச் சொந்தமான வெ.2.42 கோடி வைப்புத் தொகை மாயம்- வங்கி ஊழியர் கைது

கோலாலம்பூர், ஜூன் 16- வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த நால்வருக்கு சொந்தமான 2 கோடியே 42 லட்சம் வெள்ளி காணாமல் போனது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த 38 வயதுப் பெண் ஊழியரை சபா மாநிலத்தின் கோத்தா கினபாலுவில் கடந்த வியாழக்கிழமை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மூன்று கைபேசிகள், எட்டு ஏ.டி.எம். கார்டுகள் 4,400 வெள்ளி ரொக்கம் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தாக புக்கிட் அமான் வர்த்த குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

அப்பணத்தை மீட்பதற்கான கூட்டுச் சதியில் வங்கியின் உள்ளே உள்ளவர்களோடு வெளியிலுள்ள கும்பல் உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டுள்ளது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

வங்கியின் உள்ளே உள்ள தரப்பினருடன் கூட்டு சேர்ந்து மட்டுமே இத்தகைய பணப் பரிமாற்றப் பணிகளை மேற்கொள்ள இயலும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

இம்மாதம் தொடக்கத்தில் பெட்டாலிங் ஜெயாவில் வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் நால்வரும் வங்கிப் பணியாளரும் செய்த புகாரின் அடிப்படையில் அந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிரந்தர வைப்புத் தொகையில் வைக்கப்பட்டிருந்த தொகை சந்தேகத்திற்கிடமான முறையில் கோத்தா கினபாலுவில் ரொக்கமாக மீட்கப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்ட நபர்கள் இது குறித்து புகார் செய்தனர் என்றார் அவர்.

இந்த பணமீட்பு விவகாரம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் பணத்தை மீட்பதற்காக தாங்கள் கோத்தா கினபாலு சென்றதேயில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளனர் என்று ரம்லி சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இதில் சம்பந்தப்பட்ட இதர நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :