ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாதுகாப்புப் படையினரின் நலன் காக்கப்படும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- அன்வார் உறுதி

கோலாலம்பூர், ஜூன் 16- பாதுகாப்புப் படையினரின் நலனைக் காப்பதிலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் மடாணி அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

தனது அரசியல்  செயலாளர் அகமது ஃபர்ஹான் பவுஸி தனது சார்பாக பகாங் மாநிலத்தின் குவாந்தானில் உள்ள பெர்சேரா போலீஸ் நிலையத்திற்கு அண்மையில் திடீர் வருகை மேற்கொண்டதாக பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

காவல் துறையினரின் சௌகரியத்தை உறுதி செய்யும் வகையில் அந்த போலீஸ் நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி ஃபர்ஹானை தாம் பணித்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள அரச மலேசிய போலீஸ் படை மற்றும் சிறைச்சாலைத் துறை கட்டிடங்களை பராமரிக்கவும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் 15 கோடி வெள்ளி கூடுதலாக ஒதுக்கப்படும் என்று பிரதமர் கடந்தாண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி அறிவித்திருந்தார்.

அத்தொகையில் 4.5 கோடி வெள்ளி பொது நடவடிக்கைப் பிரிவின் 117 கட்டுப்பாட்டுச் சாவடிகளை தரம் உயர்த்துவதற்கும் உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும். மேலும் 4 கோடி வெள்ளி கிழக்குக் கரை சிறப்பு பாதுகாப்பு பகுதியின் (எஸ்கோம்) நடவடிக்கைகளுக்கும்  5 கோடி வெள்ளி அரச மலேசிய போலீஸ் படையின் குடியிருப்புகளை சீரமைப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

மலேசிய இராணுவப் படையினரின் வீடுகளை புனரமைப்பது மற்றும் அரச மலேசிய போலீஸ் படை உள்பட உள்துறை அமைச்சின் கீழுள்ள குவார்ட்டஸ்களை சீரமைப்பது ஆகிய பணிகளுக்காக 50 கோடி வெள்ளி ஒதுக்கீட்டை பிரதமர் கடந்த 2023 வரவு செலவுத் திட்டத்தின் போது அறிவித்தார்.


Pengarang :