ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தாயார் படுகொலை- மனநலம் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மகன் கைது

ஜோர்ஜ் டவுன், ஜூன் 16- இங்குள்ள ரெலாவ் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை தன் தாயாரை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் அந்த 40 வயது ஆடவரை தாங்கள் அக்குடியிருப்பில் கைது செய்ததாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸியாம் அப்துல் ஹமிட் கூறினார்.

நேற்று மாலை 5.00 மணியளவில் தன் அண்ணனைத் தொடர்பு கொண்ட அந்த சந்தேகப்பேர்வழி 67 வயதான தாயாரை கத்திரிக்கோலால் தாம் குத்திவிட்டதாகக் கூறியுள்ளார் என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக அந்த மூதாட்டியின் இரு மகன்கள் தங்கள் தாயாரை தொலைபேசி வழி தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். எனினும் தொடர்பு கிடைக்காத நிலையில் சந்தேகப் பேர்வழியே அவர்களைத் தொடர்பு கொண்டு தாம் தாயாரை கத்திரிக்கோலால் குத்தியதில் அவர் இறந்து விட்டார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்துள்ளார் என ரஸியாம் குறிப்பிட்டார்.

 அந்த மூதாட்டி தன் கணவருக்குச் சொந்தமான அந்த வீட்டிற்கு வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே வருவார் என்பதும் மற்ற தினங்களில் பத்து முவாங்கில் உள்ள மூத்த மகன் வீட்டில் தங்கியிருப்பார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது என்றார் அவர்.

குடும்ப உறுப்பினர்களை அனைவரையும் கொல்லப்போவதாக அந்த சந்தேகப்பேர்வழி ஏற்கனவே மிரட்டியுள்ளதோடு கடந்தாண்டு அவர் மனநல சிகிச்சையும் பெற்றார் என்று அவர் தெரிவித்தார்.

 


Pengarang :