MEDIA STATEMENTNATIONALSUKANKINI

எஃப்.ஏ. கிண்ண கால்பந்து- சிலாங்கூர் எஃப்.சி. குழு 4-0 கோல் கணக்கில்  நெகிரி செம்பிலானை வீழ்த்தியது

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 16- இங்குள்ள பெட்டாலிங் ஜெயா அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற எஃப்.ஏ. கிண்ண முதல் சுற்று ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப்.சி. அணி மிக அபாரமாக ஆட நெகிரி செம்பிலான் எஃப்.சி குழுவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கடந்த மாதம் நடைபெற்ற சூப்பர் லீக் போட்டியில் இதே நெகிரி குழுவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரெட் ஜயண்ட்ஸ் என அழைக்கப்படும் சிலாங்கூர் அணி, இரண்டுச் சுற்றுகள் கொண்ட காலிறுதிப் போட்டியில் கூச்சிங் சிட்டி எஃப்.சி. குழுவை சந்திக்கவுள்ளது.

பயிற்றுநர் முகமது நிட்ஸாம் ஜாமில் வழிகாட்டுதலின் கீழ் நேற்றிரவு களமிறங்கிய சிலாங்கூர் அணி ஆட்டம் தொடங்கிய ஆறே நிமிடங்களில் எதிரணியின் தற்காப்பு அரணை ஊடுருவி முதல் கோலை போட்டது. மத்திய திடல் ஆட்டக்காரர் யோஹன்ரி ஓரோஸோ அடித்த பந்து கோல் கீப்பர் ஷியாமி அபிப் ஹைக்கால் முகமது சுக்ரியை தாண்டி மிக லாவகமாக கோல் கம்பத்தில் நுழைந்தது.

எட்டு நிமிடங்களுக்குப் பின்னர் நெகிரி தற்காப்பு ஆட்டக்காரர் அயும் அபு பாக்கார் செய்த தவறு காரணமாக பந்து கோல் கம்பத்தில் புகுந்து  சிலாங்கூருக்கு இரண்டாவது கோலை பெற்றுத் தந்தது.

முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருக்கும் போது இறக்குமதி ஆட்டக்காரர் அல்வின் போர்ட்ஸ் 3வது கோலை அடித்து சிலாங்கூரின் நிலையை வலுப்படுத்தினார். ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் அந்த டச்சு ஆட்டக்காரர் மேலும் ஒரு கோலை போட்டு சிலாங்கூர் அணியை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணிக்கு கொண்டு வந்தார்.

இதனிடையே, இந்த கால்பந்தாட்டத்தைக் காண எரிதிராவகத் தாக்குதலுக்கு ஆளான சிலாங்கூர் குழுவின் விளையாட்டாளர் ஃபைசால் ஹலிம் அரங்கிற்கு வந்திருந்தார். மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த சிலாங்கூர் ரசிகர்களை நோக்கி அவர் கையசைத்து தனது மகிழ்ச்சியைப் புலப்படுத்தினார்.


Pengarang :