ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

சட்டவிரோத விளம்பரங்களை அகற்றுவதில் என்.ஜி.ஓ.- மாநகர் மன்றத்துடன் செந்தோசா தொகுதி ஒத்துழைப்பு

கிள்ளான், ஜூன் 17- பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத விளம்பரங்களை  அகற்றுவதில் கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) மற்றும் அரசு  சாரா அமைப்புகளுடன் (என்.ஜி.ஒ.) செந்தோசா சட்டமன்றத் தொகுதி சேவை மையம் இணைந்து செயல்படும்.

கிள்ளான் நகரம் குறிப்பாக செந்தோசா தொகுதி சட்டவிரோத விளம்பர பதாகைகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

விளம்பரங்கள் அல்லது பதாகைகளை பொது இடங்களில் வைப்பதாக இருந்தால் அதற்கான உரிய அனுமதியை மாநகர் மன்றத்திடமிருந்து பெறுவது அவசியமாகும். இருப்பினும், சில தரப்பினர் அனுமதியின்றி தங்கள் விருப்பம் போல் விளம்பரங்களை ஆங்காங்கே வைக்கின்றனர். அத்தகைய சட்டவிரோத விளம்பரங்களை அகற்றுவதில் அரசு சாரா அமைப்புகள் மற்றும் கிள்ளான் அரச மாநகர் மன்றத்துடன் நாங்கள் இணைந்து செயல்படவிருக்கிறோம் என்றார் அவர்.

இத்தகைய விளம்பரங்களை அகற்றுவது மாநகர் மன்றத்தின் பணியாக இருந்தாலும், கிள்ளான் மிகப்பெரிய நகரம் என்பதால் அமலாக்க அதிகாரிகள் போதுமான அளவு இல்லாதிருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ நாங்கள் முன்வந்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு தூய்மை மற்றும் பசுமை இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் தொகுதியைச் சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து  கொண்டனர்.


Pengarang :