ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சிபுவில் படகு மூழ்கியது- பாலவிஷ்ணு, ரூபனைக் காணவில்லை  

சிபு, ஜூன் 17- இங்குள்ள பெலாகா, சுங்கை ரெஜாங், லோங் மென்ஜவாப்பில் நேற்று படகொன்று கவிழ்ந்ததில் இரு பயணிகள் காணாமல் போன வேளையில் மேலும் மூவர் காப்பாற்றப்பட்டனர்.

கெடா மாநிலத்தின் பாடாங் செராய், சுங்கை கராங்கானைச் சேர்ந்த பாலவிஷ்ணு பெருமாள் (வயது 36) மற்றும் ரூபன் அப்பாராவ் (வயது 30) ஆகியோரே இந்த சம்பவத்தில் காணாமல் போனவர்கள் என்று சரவா மாநில தீயணைப்புப் படையின் நடவடிக்கை செயல்பாட்டு மையம் கூறியது.

இந்த சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட மூவரின் அடையாளம் மற்றும் இதர விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று அம்மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.33 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பெலாகா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஐவர் கொண்ட குழுவினர் 31 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சம்பவ இடத்திற்கு  விரைந்தாக அது குறிப்பிட்டது.

பாக்குன் அணைக்கட்டைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் க்ளின்ரூம் இண்டஸ்ட்ரி சென் .பெர்ஹாட் நிறுவனத்தின் ஊழியர்களான அந்த ஐவரும் பெலாகா, ஜெராம் மென்ஜாவாப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக கிராம மக்களுக்கு சொந்தமான படகை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

ஜெராம் மென்ஜாவாப் பகுதியை அடைந்ததும் வேகமான நீரோட்டம் காரணமாக படகு மூழ்கத் தொடங்கியது. பயணிளைக் காப்பாற்ற படகைச் செலுத்திய ஆடவர் கடுமையாக முயன்ற போதிலும் இருவர் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று அம்மையம் கூறியது-

சம்பவ இடத்தில் தகவல்களைப் பெற்று சம்பந்தப்பட்ட இடத்தின் நடப்புச் சூழலை ஆய்வு செய்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை ஒத்தி வைத்து விட்டு மாலை 6.30 மணியளவில் தீயணைப்பு நிலையம் திரும்பினர். இதர துறையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணி இன்று காலை தொடங்கப்பட்டது என்று அது குறிப்பிட்டது.


Pengarang :