ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காணாமல் போன பாட்டியும் பேத்தியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

கோலாலம்பூர், ஜூன் 17 – கோல குபு பாரு, புக்கிட் பூலோ தெலோரில் உள்ள டுரியன் பழத்தோட்டத்திற்கு நேற்றுச் சென்ற போது காணாமல் போன  வயதான பெண்மணியும் அவரது 12 வயது பேத்தியும் இன்று காலை 9.30 மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குப் பின்  அவ்விருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

இந்த நடவடிக்கையில் கோல குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களோடு  மலேசிய குடிமைத் தற்காப்புப் படை, அரச மலேசிய காவல்துறை மற்றும் பொதுமக்களும் ஈடுபட்டனர் என்று  அவர் சொன்னார்.

உறவினர்கள் மேற்கொண்ட தொலைபேசி   அழைப்பின் மூலம் காணாமல் போனவர்களின் இருப்பிடத்தை அடையாளம் காண முடிந்தது. மேலும் மீட்புக் குழு அந்த இடத்தை அடைய ஒரு மணி நேரம் ஆனது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

அந்த மூதாட்டி நேற்று மதியம் 12 மணியளவில் தனது மகளைத் தொடர்பு கொண்டு தாம் வழி தவறிய விஷயத்தைத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர்  அவரின் தொலைபேசியின் பேட்டரி தீர்ந்து விட்டது. அம்மூதாட்டி காணாமல் போனது தொடர்பில்  அவரது மூத்த மகன்  மாலை 3 மணியளவில் போலீசில் புகார் அளித்தார்.

இதற்கிடையில்,  பூர்வக் குடியிரான  அவ்விருவரும் குடும்ப உறுப்பினர்களால்  கண்டுபிடிக்கப்பட்டு இன்று காலை 10.08 மணியளவில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உலு சிலாங்கூர் துணை போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமது அஸ்ரி முகமட் யூனுஸ் கூறினார்.

பாதிக்கப்பட்ட இருவரும் காயமடையவில்லை மற்றும் எந்த காயமும் அடையவில்லை. ஆனால் அவர்கள் மேல் பரிசோதனைக்காகவும், தேவைப்பட்டால் சிகிச்சைக்காகவும் கோல குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Pengarang :