ECONOMYMEDIA STATEMENT

போலி வாட்ஸ்ஆப் முதலீட்டுத் திட்டத்தில்  முதியவர் வெ.22  லட்சம் இழந்தார்

ஜோகூர் பாரு, ஜூன் 17 – வாட்ஸ்அப் செயலி மூலம் பங்குகளை வாங்குவதை ஊக்குவிக்கும் முதலீட்டு கும்பலிடம்  மூலம்  மூத்த குடிமகன் ஒருவர் 22 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளிக்கும் அதிகமானத் தொகையை  இழந்துள்ளார்.

அந்த  75 வயது முதியவர் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி முதல் இந்த முதலீட்டுத் திட்டத்தில ஈடுபட்டு வந்தாக   ஜோகூர் காவல்துறைத் தலைவர் சிபி எம். குமார் கூறினார்.

அம்முதியவருக்கு அனுப்பப்பட்ட  வாட்ஸ்அப் செய்திகளில் எப்படி முதலீடு செய்வது என்பது பற்றிய தகவல்கள் அடங்கியிருந்ததோடு குறுகிய காலத்தில் நல்ல வருமானத்திற்கும் உத்தரவாதம் அளித்தது என்று அவர் சொன்னார்.

இந்தச் சலுகையால் ஈர்க்கப்பட்ட அந்த முதியவர் புலனத்தில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்தார். மேலும் தனது முதலீட்டைக் கண்காணிக்க வங்கிக் கணக்கைப் பதிவு செய்தார் என்று குமார் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர் அந்த முதியவர் பல பரிவர்த்தனைகள் மூலம் அத்திட்டத்தில் முதலீடு  செய்யத் தொடங்கினார். கடந்த மாதம் தொடங்கி இம்மாத தொடக்கம் வரை 22 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளிக்கும்  அதிகமானத் தொகை  மாற்றப்பட்டது.

இந்த முதலீட்டின் விளைவாக அவரது லாபம் 1 கோடியே 29 லட்சம் வெள்ளியை எட்டியுள்ளது என்று அவரிடம் அக்கும்பல் தெரிவித்தது. ஆனால் லாபத்தை பெறுவதற்கு முன் மேலும் 16 லட்சம் வெள்ளியை  கமிஷனாகச் செலுத்துமாறு  அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

தாம் ஏமாற்றப்பட்டதாக  சந்தேகித்ததால்  அம்முதியவர் கமிஷன்  தொகையைச் செலுத்த மறுத்துவிட்டார் என்று குமார் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :