healthMEDIA STATEMENT

இலவச இருதய, புற்றுநோய், நீரிழிவு  பரிசோதனை- செலங்கா வழி பதிவு செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 18-  இம்மாதம் 22, 29 மற்றும் 30ஆம்  தேதிகளில் மூன்று இடங்களில் மாநில அரசு நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சிலாங்கூர் சாரிங் திட்டம் வரும்   ஜூன் 22ஆம் தேதி பண்டார் பாரு கோல சிலாங்கூர் எம்.பி.கே.எஸ். மண்டபத்திலும்,  29ஆம் தேதி கோம்பாக் செத்தியா தொகுதி  மக்கள் சேவை மையத்திலும் ஜூன் 30ஆம் தேதி  ஸ்ரீ ஜுக்ரா மண்டபத்திலும் ​​நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா  ஜமாலுடின் தெரிவித்தார்.

உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண்கள், பற்கள் உள்ளிட்ட சோதனைகளை உள்ளடக்கிய  இலவச சுகாதார  இயக்கத்தில் பங்கேற்று பயனடைவதற்கான்  வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.

செலங்கா செயலியில் உள்ள  தொடக்க மதிப்பீட்டு பாரத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும்  இடர் மதிப்பீடு செய்யப்படுவதால் இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்குபெற விரும்புவோர்  அந்த செயலியில் முன்னதாக  பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பதிவு செய்வதில்  ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் 1800226600 என்ற எண்ணில் செல்கேர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் முகநூல்  மூலம் தெரிவித்தார்.

இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை  தொடர மாநில அரசு  32  லட்சம் வெள்ளியை  ஒதுக்கியுள்ளதாக 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :