ECONOMYMEDIA STATEMENT

ஊழலை அம்பலப்படுத்திய 514 அரசு ஊழியர்களுக்கு வெ.10 லட்சம் வெகுமதி

கோலாலம்பூர், ஜூன் 18- கடந்த 2012 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தண்டனைக்கு வழிவகுத்த ஊழல் வழக்குகளை அம்பலப்படுத்தியதற்காகவும் அதன் தொடர்பில்  புகார் அளித்ததற்காகவும் மொத்தம் 514 அரசு ஊழியர்களுக்கு 10 லட்சம் வெள்ளிக்கும் அதிகமானத் தொகை வெகுமதியாக  அளிக்கப்பட்டுள்ளது என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

ஊழலை ஒழிப்பதில் உதவுவதால் அரசுக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு லஞ்சம் வழங்குவது போன்றே வெகுமதி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இது வெள்ளிக்கு வெள்ளி என்ற அடிப்படையிலானது. உங்களுக்கு ரிங்கிட் 100 வழங்கப்பட்டால் அரசாங்கம் உங்களுக்கு  100 வெள்ளி  கொடுக்கும். உங்களுக்கு 10 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டால் அரசாங்கம் உங்களுக்கு பத்து லட்சம் வெள்ளியைத் திருப்பித் தரும் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) நடத்தும் பியோண்ட் தி ஹெட்லைன்ஸ் என்ற  ஒளிபரப்பு நிகழ்ச்சியில் விருந்தினராகப் பங்கேற்றபோது அவர் கூறினார்.

கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட தேசிய ஊழல் எதிர்ப்பு வியூகத் திட்டம் 2024-2028 இன் கீழ் இதே திட்டத்தை பொது மக்களுக்கும் விரிவுபடுத்தலாம். ஆனால் அது இன்னும் பரிந்துரைக் கட்டத்தில் உள்ளது என்று அஸாம் குறிப்பிட்டார்.

இந்த பரிந்துரை  இன்னும் திட்ட அளவில் மட்டுமே உள்ளது. முன்னணி நிறுவனத்துடனான குறிப்பிட்ட மற்றும் உகந்த நடைமுறை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது  இன்னும் பிரதமர் துறையின்  சட்ட விவகாரப் பிரிவின் கீழ் உள்ளது என அவர் தெரிவித்தார்.

முதலில்,  2010ஆம் ஆண்டு தகவல் அளிப்போர்  பாதுகாப்புச் சட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை  நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு  தற்போது சட்டத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.


Pengarang :