ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை பாக்காப் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல்- அடுத்த 14 நாட்களுக்கு அனல் பறக்கும் பிரசாரம்

நிபோங் திபால், ஜூன் 22- சுங்கை பாக்காப் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த நிகழ்வு இங்குள்ள தாமான் டேசா ஜாவி, ஜாவி சமூக மண்டபத்தில் நடைபெறுகிறது.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் அதிகாரி காலை 11.00 மணியளவில் அறிவிப்பார்.

இந்த இடைத் தேர்தலுக்கான நேற்று வரை ஆறு வேட்பு மனு பாரங்கள் விற்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இந்த இடைத் தேர்தலுக்கான தொடக்கக் கட்ட வாக்களிப்பு வரும் ஜூலை 2ஆம் தேதியும் தேர்தல் 6ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் வேட்பு மனுத்தாக்கல் தினமான இன்று தொடங்கி வரும் ஜூலை 5ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நடைபெறும்.

இந்த தேர்தலில் ஒற்றுமை அரசின் சார்பில் அமினுடின் பாக்கில் கழகத்தின் வட பிராந்திய முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜொஹாரி அரிபினை பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் களமிறங்கியுள்ளன. இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக உள்ளுர் வேட்பாளரான ஜோஹாரியை அக்கூட்டணி நிறுத்தியுள்ளது.

அதே சமயம் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் நிபோங் திபால் பாஸ் கட்சி உதவித் தலைவர் அபிடின் இஸ்மாயில் களமிறக்கப்பட்டுள்ளார்.

சுங்கை பாக்காப் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நோர் ஜாம்ரி லத்திப் கடந்த மே 24ஆம் தேதி காலமானதைத்  தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் கடந்த மே மாதம் 24ஆம் தேதி நிரவரப்படி 57 போலீஸ்காரர்கள் உள்பட 39,222 தகுதி பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.

 


Pengarang :