ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேரலையில் சிக்கி படகு கவிழ்ந்தது- நான்கு மீனவர்களைக் காணவில்லை

பத்து பஹாட், ஜூன் 22- மீனவப் படகொன்று பேரலையில் சிக்கி கவிழ்ந்ததில் அதிலிருந்த நான்கு மீனவர்கள் காணாமல்  போன வேளையில் ஒருவர் மீட்கப்பட்டார். இச்சம்பவம் தஞ்சோங் செகெந்திங்கிலிருந்து தென்மேற்கே 6.8 கடல் மைல் தொலைவில்  நேற்று அதிகாலை 6.00 மணியளவில் நிகழ்ந்தது.

பேரலையில் சிக்கிய அந்த படகில் 43 முதல் 63 வயது வரையிலான ஐந்து உள்நாட்டு மீனவர்கள் இருந்ததாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் கமாண்டர் முகமது ஹனிஸ் யூனுஸ் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்தைத் தொடர்ந்து ஜோகூர் பாருவில் உள்ள துணை கடல் மீட்பு மையத்தின் வாயிலாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தாங்கள் முடுக்கி விட்டதாக அவர் சொன்னார்.

மீன் பிடித் தொழிலுக்காக அந்த ஐந்து மீனவர்களும் படகில் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக பேரலைகள் எழுந்தன. இந்தப் பேரலைகளில் சிக்கி கவிழ்ந்த படகு பின்னர் கடலில் மூழ்கியது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அந்த படகு ஏறக்குறைய மூழ்கும் நிலையில் காணப்பட்டதாகக் கூறிய அவர், அதிலிருந்த 43 வயது ஆடவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றார்.

காணாமல் போனவர்களை தேடி மீட்கும் பணி 23 கடல் மைல் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :