ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை பாக்காப் தொகுதியில் நடவடிக்கை அறையை எஸ்.பி.ஆர்.எம். திறந்தது

கோலாலம்பூர், ஜூன் 22- சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல்  அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை  பொது மக்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) அத்தொகுதியில் நடவடிக்கை அறையைத் திறந்துள்ளது.

பினாங்கு மாநில எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திலும் செபராங் பிறை எஸ்.பி.ஆர்.எம். கிளையிலும் இந்த நடவடிக்கை அறை செயல்படும் என்று அந்த ஊழல் தடுப்பு ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த நடவடிக்கை அறை வரும் ஜூலை 6ஆம் தேதி வரை தினசரி 24 மணி நேரமும் செயல்படும். ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை பொது மக்கள்  மின்ஞ்சல் வாயிலாக அல்லது 04-2299262 இணைப்பு 1107 என்ற எண்கள் மூலம் தெரிவிக்கலாம்.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் மற்றும் 1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டம் ஆகியவற்றுக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அது கேட்டுக் கொண்டது.

வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலை பிரதிநிதிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் அமினுடின் பாக்கி கல்விக் கழகத்தின் வட பிராந்திய முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜோஹாரி அரிபினும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் நிபோங் திபால் பாஸ் கட்சித் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயிலும் போட்டியிடுகின்றனர்.


Pengarang :