ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம்- பாப்பாராய்டு உறுதிப்படுத்தினார்

ஷா ஆலம் ஜூன் 25-  மலேசியாவில் வரலாற்று சிறப்புமிக்க  தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக விளங்கும்  சுங்கை பூலோ ஆர். ஆர். ஐ.  தமிழ்ப்பள்ளிக்கு நீண்ட காலப் போராட்டத்திற்கு பின்னர்  6 ஏக்கர் நிலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளி வீற்றிருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  ஜாலான் தாசேக் பெடு யு5/25 இடத்தில் இந்த ஆறு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிக்கான  நிலத் திறப்பு விழா நிகழ்வு மனித வளம் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாப்பாராய்டு, முந்தையத்  தலைவர்களின் அரிய முயற்சியால் இந்த நிலம் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ஜிதம் செய்யப்பட்டு  கடந்தாண்டு பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகத்தால் உறுதி செய்யப்பட்டது என்று சொன்னார்.

இந்த நிகழ்வின் வழி சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளி நிலம் தொடர்பான சர்ச்சைகளுக்கை முடிவுகட்ட விரும்புகிறோம்.  இதுதான் ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளிக்கான நிலம். இங்குதான் புதிய பள்ளி கட்டப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் உறுதிபடக் கூறினார்.

இப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 5.94 ஏக்கராகும் எனக் குறிப்பிட்ட அவர், பள்ளிக்கு நிலத்தை அங்கீகரித்த மாநில, மத்திய அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்  என்றார்.

இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 9 கோடி வெள்ளி என மதிப்பிப்படும் வேளையில்  மூன்று ஏக்கர் நிலத்தில் பள்ளியைக் கட்டினாலும் எஞ்சிய இடத்தில் திடல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த இயலும் என  குறிப்பிட்டார்.

இப்பள்ளி நிலத்தில் புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டுமே தவிர நில சர்ச்சையில் தொடர்ந்து ஈடுபடக்கூடாது என அவர் அறிவுறுத்தினார்.

பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்திலுள்ள 5 தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் சுங்கை பூலோ ஆர். ஆர். ஐ. தமிழ்ப்பள்ளியில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான  அடிப்படை வசதிகளுடன்கூடிய  பொருத்தமான இடத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது.


Pengarang :