healthMEDIA STATEMENT

ஜூன் 9 முதல் 15 வரை நாட்டில் டிங்கி சம்பவங்கள் அதிகரிப்பு- ஐவர் மரணம்

கோலாலம்பூர், ஜூன் 26- இம்மாதம் 9 தொடங்கி 15ஆம் தேதி  வரையிலான 24வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 2,900ஆக அதிகரித்து ஐவரின் உயிரையும் பறித்தது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 2,508ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டின் 24வது வாரம் வரையிலான காலக்கட்டத்தில் பதிவான ஒட்டுமொத்த டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை  70,139 ஆகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 54,139ஆக மட்டுமே இருந்தது. டிங்கி காய்ச்சல் காரணமாக இவ்வாண்டின் முதல் 24 வாரங்களில் 53 பேர் உயிரிழந்த வேளையில் கடந்தாண்டு இக்காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 39 ஆகப் பதிவானது என அவர் சொன்னார்.

கடந்த 23வது நோய்த் தொற்று வாரத்தில் 71ஆக இருந்த நோய்ப் பரவல் அபாயம் உள்ள இடங்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 85ஆக உயர்வு கண்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த 85 டிங்கி அபாயம் உள்ள இடங்களில் 58 சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்டன. கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் எட்டு இடங்களும் கெடாவில் ஆறு இடங்களும் பேராக்கில் ஐந்து இடங்களும் நெகிரி செம்பிலானில் நான்கு இடங்களும் பினாங்கு மற்றும் சரவாவில் தலா ஒரு இடமும் அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.

இருபத்து நான்காவது நோய்த் தொற்று வாரத்தில் சிக்குன்குன்யா தொற்றினால் யாரும் பாதிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், அக்காலக்கட்டத்தில் ஜிக்கா நோய் தொடர்பில் 1,024 பேரிடம் இரத்தம், சிறுநீர் மற்றும் முதுகுத்தண்டு திரவம் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட வேளையில் அவர்களில் யாரும் அந்நோயினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்றார்.


Pengarang :