ECONOMYMEDIA STATEMENT

தலைமைத்துவ மடாணி சிந்தனையாளர் திட்டம் இதர உயர்கல்விக் கூடங்களுக்கும் விரிவாக்கப்படும்

கோலாலம்பூர், ஜூன் 26- மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (யு.ஐ.டி.எம்.) மேற்கொள்ளப்பட்டு வரும் தலைமைத்துவ மடாணி சிந்தனையாளர் திட்டம் மேலும் அதிகமான உயர்கல்விக் கூடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடீர் கூறினார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த அறிவிப்பை நேற்றிரவு வெளியிட்டார். 

தேசிய மேம்பாட்டிற்கான இலக்கை மெருகூட்டுவதில் உயர்கல்விக்கூட தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் இளம் தலைவர்கள் ஒன்றிணைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

யு.ஐ.டி.எம். ஒத்துழைப்புடன் மலேசிய தேசியக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரு நாள் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள யு.ஐ.டி.எம். உயர்தலைமைத்துவத்தைச் சேர்ந்த 74 பேர் பங்கேற்றதாக அவர் சொன்னார்.

மடாணி மலேசியா நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவும் ருக்குன் நெகாரா கோட்பாட்டை போற்றும் வகையிலும் கல்விக்கழகங்களின் இலக்கை வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய துரித வளர்ச்சிக்கு ஏற்ப யு.ஐ.டி.எம்.மும் விரைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என அவர் அந்த பதிவில் வலியுறுத்தினார்.

அரசாங்க உயர்கல்விக் கூடங்கள் நிர்வாகத்தை மட்டும் முழுமையாக சார்ந்திருக்கும் என்ற கடந்த கால வரலாற்றை யு.ஐ.டி.எம். இனியும் தொடரக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். 

 


Pengarang :