ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சரணடைந்த 68,900 அந்நிய நாட்டினர் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

ஷா ஆலம், ஜூன் 26- இவ்வாண்டு ஜனவரி முதல் இம்மாதம் வரையிலான காலக்கட்டத்தில் செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாத 20,207 அந்நிய நாட்டினர் தங்களின் சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

அந்நியக் குடியேறிகளின் புகலிடமாக விளங்கிய 244 இடங்களில் குடிநுழைவுத்துறை நடத்திய 7,975 சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் பிடிபட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

அந்த நடவடிக்கைகளின் போது மொத்தம் 76,477 பேரிடம் நாங்கள் சோதனை நடத்தினோம். அவர்களில் 20,207 பேர் செல்லத்தக்க ஆவணங்களைக் கொண்டிராதது கண்டறியப்பட்டது. அவர்கள் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

இந்த சோதனைகளின் போது முதலாளிகளையும் நாங்கள் கைது செய்தோம். முதலாளிகள் வேலைக்கு அமர்த்தாவிட்டால் அவர்கள் இந்நாட்டிற்கு வர வேண்டிய அவசியமே எழாது. மொத்தம் 456 முதலாளிகளை நாங்கள் தடுத்து வைத்தோம் என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.

சுய விருப்பத்தின் பேரில் தாயகம் திரும்ப அனுமதிக்கும் திட்டத்தின் கீழ் மொத்தம் 79,231 அந்நிய நாட்டினர் சரணடைந்த வேளையில் அவர்களில் 68,900 பேர் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் அவர்கள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் எனக் கூறிய அவர், இந்த நடைமுறை தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றார்.

அபராதத் தொகையாக மொத்தம் 40000 வெள்ளி வசூலிக்கப்பட்டது. சரணடைந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் என்றார் அவர்.


Pengarang :