ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்தாங் காலியில் வரும் சனிக்கிழமை வேலை வாய்ப்பு கண்காட்சி- பாப்பாராய்டு தகவல்

ஷா ஆலம், ஜூன் 26- பத்தாங் காலி, டத்தோ அப்துல் ஹமிட் மண்டபத்தில் வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கும் ஜோப்கேர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று பயனடையுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த நிகழ்வில் பல்வேறு நிறுவனங்களும் தொழில் துறைகளும் வாய்ப்பு தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக முகப்பிடங்களைத் திறக்கவுள்ளதாக மனித வளத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

இத்தகைய முகப்பிடங்கள் தவிர்த்து அன்றைய தினம் முழுவதும் வேலைகளுக்கான நேர்காணல் நிகழ்வும் நடைபெறும். வேலைக்கு ஆள் எடுக்கும் பணியை விரைவு படுத்துவதற்கும் தகுதி உள்ளவர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

வேலை தேடும் சிலாங்கூர் மாநில குடியிருப்பாளர்களுக்கு தங்கள் கல்வித்  தகுதிக்கு ஏற்ற வேலைகளை வழங்கக்கூடிய மிகச் சிறந்த திட்டமாக இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வேலை தேடும் தரப்பினருக்கு உதவுவது மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பொது மக்களுக்குத் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என அவர் சொன்னார்.

வேலை தேடுவோர் தங்களின் சுய விவரக் குறிப்புடன் நேர்காணலுக்கு தயார் நிலையில் வரவேண்டும். மேல் விபரங்களுக்கு 03-55447305 அல்லது 03-5447307 என்ற எண்களில் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :