ECONOMYMEDIA STATEMENT

11  குடியிருப்பாளர் சங்கங்கள் எம்.பி.பி.ஜே.வின் அங்கீகார விருதைப் பெற்றன

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26- பெட்டாலிங் ஜெயாவை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் விவேக, நிலையான மற்றும் ஆக்கத்தன்மை கொண்ட நகராக உருவாக்கும் திட்டத்தை வெகு சிறப்பாக அமல்படுத்திய 11 சமூக அமைப்புகளுக்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.பி.ஜே.) விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சுற்றுச்சூழல் நட்புறவு, பசுமை, அண்டை அயலார் நட்புறவை வளர்த்தல் போன்ற திட்டங்களில் பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்களின் பங்கேற்பின் அடிப்படையில் இந்த விருதுக்கு தகுதியான அமைப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

பி.ஜே.எஸ்.எஸ்.ஆர். சமூக தரவுதளத்தின் மூலம் 88 சமூக அமைப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு 11 அமைப்புகள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

இந்த மதிப்பீட்டு நடவடிக்கையில் சிறார்கள், இளையோர், பதின்ம வயதினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் பங்கேற்பை உட்படுத்திய 17 நீடித்த மேம்பாட்டு இலக்குகளையும் இந்த மதிப்பீடு கவனத்தில் கொண்டது என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் பெட்டாலிங் ஜெயா அண்டை அயலார் குழுக்களுக்கு உதவிகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 2030 பி.ஜே.எஸ்.எஸ்.ஆர். விருதை பிஜேஎஸ் 1 சவுத் அவென்யு குடியிருப்பாளர் சங்கம் தட்டிச் சென்றது. இச்சங்கத்திற்கு 20,000 வெள்ளி ரொக்கப்பரிசும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தைப் பிடித்த கம்போங் துங்கு எஸ்எஸ்1 குடியிருப்பாளர் சங்கம் 15,000 வெள்ளி ரொக்கத்தையும் மூன்றாம் இடத்தைப் பிடித்த டாமன்சாரா டாமாய் குடியிருப்பாளர் மற்றும் வீட்டு உரிமையாளர் சங்கம் 10,000 வெள்ளியையும் பரிசாகப் பெற்றன.

 


Pengarang :