ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிரியான் பசுமைத் தொழிலியல் பூங்காவின் இலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் மீது மக்களவையில் இன்று விவாதம்

கோலாலம்பூர், ஜூலை 2- உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான கிரியான் ஒருங்கிணைந்த தொழிலியல் பூங்காவின் எதிர்கால இலக்கு உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்விவகாரத்தை பாலிக் பூலாவ் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் டத்தோ முகமது பக்தியார் வான் சிக் இன்று நடைபெறும் நாடாளுமன்ற  கேள்வி நேரத்தின் போது பிரதமரிடம் எழுப்புவார்.

தேசிய எரிசக்தி மாற்ற இலக்குக்கு ஏற்ப உள்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த கிரியான் பசுமைத் தொழிலியல் பூங்காவின் எதிர்கால இலக்கு குறித்து அவர் விளக்கம் கோருவார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட மாவட்ட நிலை வரையிலான மக்களின் வாழ்க்கைத் தர அளவீட்டின் நடப்பு மேம்பாடு குறித்து உலு திரங்கானு தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட் கேள்வியை முன்வைப்பார்.

அந்த புதிய அளவீட்டின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் அமல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து அவர் வினா தொடுக்கவுள்ளார்.

பின்னர் நடைபெறும் வாய்மொழி கேள்வி பதில் அங்கத்தின் போது, டீசல் வாகனங்களை வைத்திருக்கும் பி40 மற்றும் எம்40 தரப்பினருக்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் பூடி மடாணி எனப்படும் மடாணி உதவித் தொகை திட்டத்தின் சமீபத்திய நிலவரம் பற்றி நிதியமைச்சரிடம்  ரொம்பின் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ அப்துல் காலிப் அப்துல்லா கேள்வியெழுப்புவார்.

கேள்வி பதில் அங்கத்திற்குப் பிறகு மலேசிய மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) 2021 மற்றும் 2022 ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை தொடர்பான மசோதா மீது விவாதங்கள் தொடரும்.


Pengarang :