ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வீடு புகுந்து கொள்ளையிடும் கும்பல் முறியடிப்பு- ஐவர் கைது

கோலாலம்பூர், ஜூலை 8 –  கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில்  கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை  நடவடிக்கைகளில் 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் நிகழ்ந்த   கொள்ளைகளில் தொடர்புடையர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இருபத்திரண்டு முதல் 32 வயது வரையிலான அந்த  ஐவரும்   இரவு 8.00 மணியளவில்  கைது செய்யப்பட்டதாக  சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.

கடந்த வியாழனன்று  பூச்சோங்கில் உள்ள ஒரு  இல்லத்தில் நிகழ்ந்த கொள்ளை   தொடர்பாக 46 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

அந்த கொள்ளைச் சம்பவத்தில் அம்மாதுவுக்கு  சுமார் 40,000 இழப்பு ஏற்பட்டதாக அவர்  இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

சந்தேக நபர்கள் அனைவருக்கும் கடந்தகால குற்றப் பதிவுகள் இருப்பது தொடக்கக் கட்ட  சோதனையில் தெரியவந்ததாகக் கூறிய அவர், அக்கும்பலிடமிருந்து   கைக்கடிகாரங்கள் மற்றும் கைப்பைகள் போன்ற திருடப்பட்ட சில பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாகச் சொன்னார்.

இந்த கைது நடவடிக்கையின் விளைவாக சுபாங் ஜெயா மாவட்டத்தில் நிகழ்ந்த  15க்கும் மேற்பட்ட வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவங்களுக்குத்  தீர்வு காணப்பட்டதாக காவல்துறை நம்புகிறது என்று அவர்  தெரிவித்தார்.

அனைத்து சந்தேக நபர்களும் வரும் புதன்கிழமை  வரை நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டுள்ளதாக் கூறிய அவர்,  குற்றவியல் சட்டத்தின் 457 வது பிரிவின் கீழ் இச்சம்பவம்  விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :