healthMEDIA STATEMENT

விஷம் தடவப்பட்ட கொரோப்போக் நொறுக்குத் தீனியை உட்கொண்ட இரு சகோதரர்கள் கவலைக்கிடம்

அலோர்ஸ்டார், ஜூலை 8- எலி மருந்து தடவப்பட்ட கெரோப்போக் நொறுக்குத் தீனியை உட்கொண்ட இரு சகோதரர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கூலிம், கம்போங் பாடாங் உபியில் நேற்று காலை நிகழ்ந்தது.

இரண்டு மற்றும் மூன்று வயதுடைய அவ்விரு சிறுவர்களுக்கும் காலை மணி 11.00 அளவில் திடீரென வாந்தி ஏற்பட்டதோடு வாயில் நுரையும் தள்ளியதை அவர்களின் தாயார் கண்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஜிசுல் முகமது கைரி கூறினார்.

வீட்டின் அருகிலுள்ள தோட்டத்தின் வேலி கம்பியில் கட்டி தொடங்க விடப்பட்டிருந்த  கெரோப்போக் பொட்டலங்களில் இருந்த எலி மருந்து தடவப்பட்ட நொறுக்குத் தீனியை அவ்விரு சிறார்களும் உட்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அச்சிறுவர்களை அவரின் தாயார் மாலாவ் சுகாகார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கூலிம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அவ்விருவரின் உடல் நிலையும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில்  தெரிய வந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவ்விரு சகோதரர்களும் தொடர் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்றார் அவர்.

குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்த கெரோப்போக் பொட்டலங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 284வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அருகிலுள்ள நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வரும் விவசாயியை தாங்கள் தேடி வருவதாக அவர் கூறினார்.


Pengarang :