ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

மூடா, புக்கிட் மேரா அணைக்கட்டுகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியது

கோலாலம்பூர், ஜூலை 10- கெடா மாநிலத்தின் மூடா அணைக்கட்டு மற்றும் பேரா மாநிலத்தின் புக்கிட் மேரா அணைக்கட்டில் கச்சா நீரின் அளவு வெகுவாக குறைந்து அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்விரு அணைக்கட்டுகளிலும் நீரின் அளவு தற்போது முறையே 18.37 மீட்டர் மற்றும் 19.97 மீட்டராக உள்ளது.

மேலும் ஐந்து நீர்த்தேக்கங்களில் நீரின் கையிருப்பு எச்சரிக்கை அளவில் அதாவது 59.99 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளதாக பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.

ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக நட்மா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

கெடா மாநிலத்தின் பெடு மற்றும் மலுட் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு முறையே 36.10 மற்றும் 50.50 விழுக்காடாவும், பினாங்கு மாநிலத்தின் தெலுக் பஹாங் மற்றும் ஆயர் ஹீத்தாம் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 37 மற்றும் 56.70 விழுக்காடாகவும் உள்ள வேளையில் பெர்லிஸ் மாநிலத்தின் தீமா தாசோ அணைக்கட்டு 42.60 விழுக்காட்டு நீரைக் கொண்டுள்ளதாக அது குறிப்பிட்டது.

நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் 29.99 விழுக்காட்டிற்கும் குறைவாகப் பதிவாகும் போது அபாயக்கட்டம் அறிவிக்கப்படுகிறது. 30 முதல் 59.99 விழுக்காட்டு நீர் கையிருப்பு எச்சரிக்கை அளவாகவும் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான நீர் கையிருப்பு வழக்கமான அளவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வெப்ப வானிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 108ஆகப் பதிவான வேளையில் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி இந்த எண்ணிக்கை 103 சம்பவங்களாக இருந்ததாக சுகாதார அமைச்சின் தரவுகளை மேற்கோள் காட்டி நட்மா செய்தி  வெளியிட்டுள்ளது.

 


Pengarang :