ECONOMYMEDIA STATEMENT

சட்டவிரோத பண மீட்பு புகார்களைக் கையாள்வதில் எஸ்.ஓ.பி.யைக் கடைபிடிப்பீர்- வங்கிகளுக்கு அறிவுறுத்து

மலாக்கா, ஜூலை 12 – வாடிக்கையாளர்களின் பணம் சட்டவிரோதமாக மீட்கப்படுவது தொடர்பான புகார்களைக் கையாள சீரான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஓ.பி.) பின்பற்றுமாறு  நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் நினைவூட்டினார்.

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அல்லது கணக்கு வைத்திருப்பவர்கள் பணம்  அங்கீகாரம் இல்லாமல்  மீட்கப் பட்டதை  விசாரிக்காத வங்கி அதிகாரிகள் குறித்து தனது அமைச்சுக்கு புகார்கள் வந்துள்ளதாக லிம் கூறினார்.

சில புகார்கள் நிதி அமைச்சினால் கையாளப்படுகின்றன.  ஆனால் அவை குறைந்த அளவிலும் கட்டுப்பாட்டிலும் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று  இங்கு  நடைபெற்ற டிரேஸ் அண்ட் ரிக்கவரி ஆபரேஷன் (டி.ஆர்.ஓ.) 2.0  தொடர் 2/2024 இன் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வில் சுங்கத் துறையின் தலைமை  இயக்குநர் டத்தோ அனிஸ் ரிசானா முகமது ஜைனுடினும் கலந்து கொண்டார்.

அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால் எஸ்.ஓ.பி.  செயலாக்கம்  கடுமையாக்கப்படும். ஆனால் அவற்றைப் பின்பற்ற மறுக்கும் வங்கிகள் உள்ளன என அவர் சொன்னார்.

எஸ்.ஓ.பி.கள் மற்றும் இது போன்ற அறிவிப்புகள் புதியவை அல்ல என்பதால் நாங்கள்  நினைவூட்டலை வழங்கியுள்ளோம். வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் சட்டவிரோதமாக எடுக்கப் பட்டதாக புகார் கூறினால் வங்கி அதனை விரைந்து விசாரிக்க வேண்டும். அது வாடிக்கையாளர் அலட்சியம் காரணம் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறைகளும் பின்பற்றப் பட்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டால் அந்த பண இழப்புக்கு  வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை வழக்கமாகச் சரிபார்க்க அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும் இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்து  வங்கியின் விசாரணையின் முடிவுகளில் அவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் வாடிக்கையாளர் நிதிச் சேவை குறை தீர்ப்பாளரிடம் அல்லது நேரடியாக  பேங்க் நெகாராவிடம் புகார் செய்யலாம்  என்றார் அவர்.


Pengarang :