ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாடு தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல

கோலாலம்பூர், ஜூலை 17 – துல்லியமான சமூக-பொருளாதார அளவீடுகளுடன் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக மலேசிய குடிமக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கும் மத்திய தரவுத்தள மையம் (பாடு), தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் 2024 (சட்டம் 709)க்கு உட்பட்டது அல்ல.

அச்சட்டம் வணிகப் பரிவர்த்தனைகளில் தனிப்பட்ட தரவு செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது என டிஜிட்டல் அமைச்சர் கோபிந் சிங் டியோ கூறினார்.

“எனவே, பாடு 709 சட்டத்திற்கு கட்டுப்பட்டதா என்று நீங்கள் கேட்டால், இல்லை. ஏனெனில், வணிக பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்காக இச்சட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 தனிநபர் தரவு பாதுகாப்பு (திருத்தம்) மசோதா 2024 மீதான விவாதத்தின் போது, ​​“அரசாங்க அளவிலான தரவுகளைக் கொண்ட பாடு தொடர்பான மக்களவையில் எழுந்த கேள்விகளுக்கு இது பதிலளிக்கிறது” என்று அவர் கூறினார்.

பாடு என்பது மலேசிய குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் சுயவிவரங்களை உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த தேசிய சமூப் பொருளாதார தரவுத்தளமாகும்.

மலேசியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்க பல்வேறு அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் தரவை இது ஒருங்கிணைக்கிறது.

இருப்பினும், இதன் மூலம் தரவுகளைக் கையாள்வதில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குப் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்று அர்த்தம் இல்லை என கோபிந் தெளிவுபடுத்தினார்.

சட்டம் 709ஐத் திருத்துவதற்கான காரணம் தரவுக் கட்டுப்பாட்டாளர்கள் அல்லது தரவுச் செயலிகளால் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புக் கொள்கைகளை மீறுவதற்கான அபராதத் தொகையை RM300,000 இலிருந்து RM1 மில்லியனாக அதிகரிக்க ஆகும் என அவர் கூறினார்.

விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும், எதிர்காலத்தில் தரவுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதற்கு தயாராவதற்கும்  சட்டம் 709 முக்கியமானது என்று கோபிந் மேலும் கூறினார்.

 

– பெர்னாமா

 


Pengarang :